ஏலேய்ய்... நாளைக்கு எல்லாரும் நல்ல டிரெஸ்ஸ போட்டுட்டு வாங்கடா... நம்ம கம்பெனிய படம் புடிக்க B.B.C யிலேருந்து வராங்கடா ... ஏலேய்ய் அதுவொண்ணும் சாதரண டிவி இல்லை. உலகம் பூராவும் தெரியகூடியது .. என்று மொதலாளி சொன்னதும் அந்த சின்ன வெடி பட்டரை அல்லோலகல்லோல பட்டது.
சிவா , நீ என்ன ட்ரெஸ் போடுவேடா?
நான் என்னத்தை , என் போன வருஷ தீவாளி டிரஸ் தான் போடணும். இந்த வருஷம்தான் புதுசு எடுக்கலையே ...
வித விதமான ஆலோசனைகள்.
எல்லார் மனதிலும் நாம T.V. யில வரப்போரோம்ங்க்ற சந்தோசம்.
விடிந்தது...... பெரிய கேரவன் வேன் வந்து நின்றது.. எல்லா ஆரம்ப வேலைகளையும் முடித்து அந்த பெண் பேட்டி எடுக்க ஆயத்தமானாள்.
தம்பி... உன்னோட பெயர் என்ன ?
ராஜா ...
இந்த வேலை உனக்கு பிடிச்சிருக்கா?
ஆமாம். படிக்கணும்னு ஆசை இல்லையா?
ரொம்ப இருக்குங்க... ஆனா குடும்ப சூழல் அப்படி... அதானால்தான் வேலைக்கு வந்துட்டேன். என் அக்கா கூட இங்கேதான் வேலை பார்க்கிறாள்.
அப்பா என்ன செய்கிறார் ...
அப்பா சும்மாதான் இருக்கிறார் .. எங்க சம்பளம் தான் குடும்பத்துக்கு....
அடுத்தது ...அடுத்தது ... எல்லாரிடமும் கேள்வி கேட்டுக்கொண்டே வந்தாள். எல்லார் மனதிலும் படிக்கணும் படிக்கணும் என்றே தான் இருந்தது,,, எல்லாருக்கும் ஒரு கனவு.. படிக்க முடிந்தால் டாக்டர் ஆகணும். எஞ்சினியர் ஆகனும்னு...
அடுத்து ..
உன்னோட பெயர் என்ன தம்பி ?
சூர்யா...
படம் உதவி : Google Image Search
ரொம்ப நல்ல பெயர் ... ஒரு நடிகர் இருக்கருல்ல அந்த பெயரில் ஒரு நடிகர் கூட இருக்கார் தெரியுமா?
ஆமாம். ஆனா அவர் நடிக்க வர்றதுக்கு முன்னாலேயே என் பேர் சூர்யாதான்..
சரி. எல்லாருக்கும் படிக்கனும்னு ரொம்ப ஆசை இருக்கு... உனக்கு படிச்சி என்னவா ஆக ஆசை?
இல்லை. எனக்கு படிக்க ஆசை இல்லை.
என்னது... படிக்க ஆசை இல்லையா? தம்பி தப்பு. ரொம்ப தப்பு. படிக்க முடியலைங்கறது சூழல். ஆனா மனசுக்குள்ள படிக்கணும் என்ற எண்ணம் இருந்த்கிட்டே இருக்கணும். அப்போதான் எப்போ சான்ஸ் கிடைத்தாலும் படிக்கனும்னு தோணும்.
அதெல்லாம் எனக்கு தெரியாது... எனக்கு படிக்க விருப்பமில்லை...
என்ன நீ.... நான் சொல்றேன். கொஞ்சம் கூட திருந்த மாட்டீயா? படிக்கனும் என்ற ஆசை மனதுக்குள் கொண்டுவரனும். அப்போதான் முன்னேற முடியும்...
அவளுக்கு கொஞ்சம் கோவம் வந்தது. இந்த சின்ன வயசில இப்படி அழுத்தமா இருக்கானே என்று...
அவனுக்கும் அதே கோவம் வந்தது.... கோவத்தோட மறுபடியும் சொன்னான் ... இல்லைங்க .. எனக்கு படிக்க புடிக்கலை.. இங்க வேலை பார்த்தா போதும்.. இங்க கிடைக்கிற அஞ்சோ , பத்தோ போதும்...
என்னப்பா நீ .. இப்படி சொல்றே... நீ சின்ன பையன் .. இன்னும் எவ்வளவோ இருக்கு வாழ்க்கையில ...
சொல்லவும் அவன் வெடித்தான்.... ..... .... ஆமாங்க ... இருக்கு.... இருக்கு....
அவளுக்கு பேச தோணலை.... அவனை கோவமாய் பார்த்தாள்...
அந்த பார்வை .... இவனை ஏதோ செய்ய .. மீண்டும் வெடித்தான்..
ஆமாங்க... இருக்கு.... இன்னும் எவ்வளவோ இருக்கு... அஞ்சு ரூவாக்கும் பத்து ரூவாக்கும் உங்க அம்மா செருப்பால ... வாரியலால் அடி வாங்கறதை பாத்திருக்கீங்களா? நான் பாத்திருக்கேன்.. தினமும் பார்த்துகிட்டு இருக்கேன்... அந்த அஞ்சு ரூவாவோ பத்து ரூவாவோ சாயங்கலம் கொண்டுபோய் கொடுத்து எங்க அம்மாவை அப்பன் கிட்டேயிருந்து காப்பாத்தினா போதும்ங்க ... படிப்புல்லாம் வேண்டாம்...வேண்டாம் ... வேண்டவே வேண்டாம்.......