"சில்க்"-பாய்


ஆண்டாண்டு காலமாய் எண்ணெய் தேய்க்காத பரட்டை வெள்ளை முடி...
கொஞ்சம் குள்ளமான உருவம்....
வாய் நிறைய சிரிப்பு...
அழுக்கேறிய உடை....
கையில் தண்ணீர் கேத்தல்....
--- இதுதான் "சில்க்"-பாயின் அடையாளம்.

திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் கல்லூரியின் விடுதியில் சமையல் அறையிலேயே வாழ்க்கை மொத்தத்தையும் தொலைத்த அந்த மனிதனின் அடையாளம்.

இளமை கொழுப்பில் நாங்கள் செய்த மொத்த அராஜகத்திற்க்கும் சிரிப்பை மட்டுமே பதிலாய் தந்த அந்த மனிதனை இன்னும் நான் மறக்காமல் இருப்பது எனக்கே கொஞ்சம் பெருமையாய் இருக்கிறது. அதிகம் பேசியதில்லை அவர். ஆனால் பற்றிய செய்திகள் அதிகம் பேசும். எனக்குத் தெரிந்து யாரிடமும் கோபப்பட்டதில்லை. நான் கூட நினைப்பதுண்டு இறைவன் இவருக்கு கோபம் என்ற உணர்வையே கொடுக்கவில்லையோ ..என்று...

மதிய உண்வு இடைவேளையின் போது உணவு வாயை எட்டுதோ இல்லையோ அனைவர் வாயிலும் சில்க்...சில்க்...என்று ஆயிரம் முறை வரும். "சில்க்..தண்ணி....சில்க்...பருப்புக்கு நெய் இன்னும் வரலை...இது போக காது கூச்சச் செய்யும் கேலிகள்...."அப்போ ஒண்ணும் தோணலை...ஆனா இப்போ கஷ்டமா இருக்கு. 

இது சகஜம்தானே...தமிழ்நாடு முழுவதும் இப்படி ஆயிரக்கணக்கான பேர் ஆயிரக்காண பெயர்களில் இருக்கிறார்களே...இவரிடம் அப்படி என்ன மேன்மை...என்ற உங்கள் குரல் எனக்கும் கேட்கிறது...உங்களுக்கு என் பதில்....

"ஆம்....இருக்கிறது...அந்த 40+ வயதிலும் அவருக்கு கல்யாணம் ஆகவில்லை.அவர் விரும்பவில்லை. தன்னுடைய தங்கைகளுக்கு கல்யாணம் செய்துவிட்டுத்தான் தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று பிடிவாதமாய் இருந்து அதை நிறைவேற்றியும் காட்டினார். ஆனால் பாவம் அவர் தங்கைகளுக்கு மணமுடிக்கும்போது இவர் வயது 40 தாண்டியிருந்தது..."...

இன்னமும் என் மனதின் தீராத ஒரே வலி...கிட்டத்தட்ட 2 வருடம் விடுதியில் இருந்தேன்..அதாவது கிட்டத்தட்ட 730 நாள்கள். அதாவது கிட்டத்தட்ட 17520 மணி நேரம்..அதாவது கிட்டத்தட்ட 1051200 நிமிடங்கள்...அதாவது கிட்டத்தட்ட 63072000 நொடிகள்... இதில் ஒரே ஒரு நொடி கூட அவரிடம் அன்பாய் பேசியதில்லை. அவர் தியாகத்தை பாராட்டியதில்லை...அட...போங்க... அவரோட பெயர் கேட்டதில்லை.....என்ன ஜென்மங்க நானெல்லாம்...என்ன ஜென்மம்....

Comments :

0 கருத்துகள் to “"சில்க்"-பாய்”

கருத்துரையிடுக